Friday, February 14, 2014

திரு ஆரூர் தியாகேசா

     தமிழ் நாட்டில் உள்ள பல பழமையான ஆலயங்களுள் ஆரூர் தியாகேச ஆலயமும் ஒன்று.
இதன் சிறப்புக்கள் சொல்லிலோ எழுத்திலோ அடங்காதவை. மஹாவிஷ்ணு, தேவேந்திரன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டது இந்த தியாகராஜ விக்ரஹம். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புக்கள் பெற்றது.
     கோயிலுக்கு ஐந்து பிரதான வாயிற் கோபுரங்கள் இருப்பதும் வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இறைவனின் திருவடிகளைக்காணமுடியும் என்பதும், குறிப்பிட்ட சில மலர்கள் மட்டுமே அர்ச்சனைக்கு ஏற்பது போன்ற தனி சிறப்புக்கள். இவ்வூரின் பஞ்சவாத்தியமும் உலகப்புகழ் பெற்றது. தஞ்சை பெரியகோவில் மாதிரியே இவ்வாலயத்திலும் கலசநிழல் கீழே விழாதவண்ணம் அமைந்துள்ளது. இங்கு மட்டுமே தந்தம் இல்லாத வினாயகரை தரிசிக்கலாம்.
      திரு ஆரூர் தேர், அதற்குத்தான் எத்தனை மகிமை. முன்னூறு டன்னுக்குமேல் எடையுள்ள பிரும்மாண்டமான இவ் ஆழித்தேரை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். "திரு ஆரூர் தேர் அழகு" என்று சொல்லும் பழமொழிக்கு ஏற்ப இந்தத்தேர் தான் எத்தனை கலை அம்சம் பொருந்தியது. இவ்வாழித்தேரைத்தவிர மற்ற வாகனங்களில் தியாகேசர் வீதி உலா வருவதில்லை. கிரகணகாலத்திலும் நடை திறந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது இங்கு தனி சிறப்பு.
      இங்கு தெப்போற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தத்தெப்பமும் மிகப்பெரியது. இதில் குறைந்தது 200 பேராவது கண்டிப்பாக அமரமுடியும். தெப்பத்தின் உள்ளே பெரிய பெரிய வித்வான்களின் கச்சேரிகளும் நடைபெரும்.
       இவ்வூருக்கு மற்றுமொரு சிறப்பு, ஐந்துவேலி ஆலயம் ஐந்துவேலி கமலாலயம். கமலாலயம் என்பது இங்குள்ள திருக்குளத்தின் பெயர். ஆலயம் என்ற பெயர் கொண்ட திருக்குளம் இது ஒன்றே.
       இவ்வூரில் தனக்கென தனி கொடிமரம், தனிமதில், தனிக்கோயில் கொண்டு மோனத்தவநிலையில் காட்க்ஷி அளிக்கும் கமலாம்பிகையின் பேரெழிலை காண கண்கள் கோடிவேண்டும். இங்கு அம்பாள் சிவசக்தி வடிவமாய் சிரசில் கங்கையும் பிறையையும் அணிந்து அருள் புரிகிறாள். இங்கேயே ஷண்முகனைகொஞ்சும் அன்னையாய் நீலோத்பலாம்பளையும் தரிசிக்கலாம்.
      இவ்வூரில் சங்கீத மும்மூர்த்திகள் அவதரித்ததும் மற்றுமொறு சிறப்பு. தீட்ஷதர் பாடிய வாதாபிகணபதிம், வல்லபநாயகஸ்ய, ஶ்ரீமஹாகணபதிம் போன்ற வினாயகர் கீர்த்தனைகள் அனைத்தும் இங்குள்ள வினாயகரின் மேல் பாடப்பட்டவைகள். நவாவர்ண கிருதிகளால் கமலாம்பாளையும் தீட்ஷதர் பாடிப்பணிந்து பரவசம் அடைந்துள்ளார் என்பதும்ஒரு சிறப்பு.
         இப்படி இன்னும் பல புகழ்களை கொண்டது திருவாரூர். ஊரழகு, பேரழகு, நீரழகு, தேரழகு, தெய்வமோஅழகோ அழகு, தெருவுமே அழகு என அழகெல்லாம் ஒருசேர விளங்கிடும் இக்கோயிலை கண்டுமகிழ இப்பொழுதே புறப்படுங்கள்.

இது நான் பல இடங்களிலிருந்து படித்தும் கேட்டும் அறிந்த தகவல்கள். திருவாரூருக்கு பக்கத்தில்தான் நான் பிறந்து வளர்ந்த கிராமம் கல்யாணமஹாதேவி உள்ளது.
          

No comments:

Post a Comment