Friday, March 7, 2014

எழுதுகோலும் நமக்கு ஓர் குருவே!

       நாம் எழுதும் பேனா, பென்சில், சிலேட்டுக்குச்சி எல்லாமே ஓர்ஆசிரியர். எப்படி தெரியுமா? தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையுமே மிச்சமில்லாமல் அது கொடுத்து விடுகிறது. நல்லது எழுதுகிறானா, நல்லவன் எழுதுகிறானா, என்பதையெல்லாம் அது பார்ப்பதில்லை. அந்த எழுதுகோல்கள் நமக்கு எதை புரிய வைக்கிறது தெரியுமா? தான் வந்த நோக்கம் என்னவோ அதை எந்தக்குறையும் இல்லாமல் செய்து முடிக்கவேண்டும். அதனுடைய பலாபலன்களை எதிர் பார்க்கக்கூடாது. நினைத்துப்பார்த்தால் எத்தனை ஆச்சர்யமாக இருக்கிறது. நம்மையும் பற்று வைக்காமல், எதிர் பார்ப்பு இல்லாமல் கடமையை செய், என்று சொல்கிறது அது. 
     இன்னொரு விஷயம் - அது பேப்பரை நோக்கி குனியும்பொழுதுதான் எழுதும்; நிமிர்ந்தால் எழுதாது. அது போல் பணிவுடன் நாம் இருந்தால் மற்றவர்களுக்கும்  நம்மால் பலன் உண்டு. அவர்களும் நம்மை மதிப்பார்கள். நிமிர்ந்து ஆவணமாக இருந்தால், எவராலும் மதிக்கப்படவும் மாட்டோம், எவருக்கும் பயன்படவும் மாட்டோம். எத்தனை அழகான அறிவார்த்தமான சொற்கள்!

சம்போ சங்கர மஹாதேவா

சம்போ சங்கர மஹாதேவா சாம்ப சதாசிவ மஹாதேவா
சம்போ சங்கர சாம்ப சதாசிவ அம்பா நாதா மஹாதேவா
ஹரஹர ஹரஹர மஹாதேவாசிவசிவ சிவசிவ மஹாதேவா

கனக சபேஸா மஹாதேவா கங்காதரா மஹாதேவா
கனக சபேஸா கங்காதரா கிரிஜா ரமணா மஹாதேவா
ஹரஹர ஹரஹர மஹாதேவாசிவசிவ சிவசிவ மஹாதேவா


சிதம்பரேஸா மஹாதேவா சிவகண சுகிதா மஹாதேவா
சிதம்பரேஸா சிவகண சுகிதா சிவகாமிப்பிரிய மஹாதேவா
ஹரஹர ஹரஹர மஹாதேவா சிவசிவ சிவசிவ மஹாதேவா

நீலகண்டா மஹாதேவா ந்ந்தி வாகன மஹாதேவா
நீலகண்டா ந்ந்தி வாகன உமாமகேசா மஹாதேவா
ஹரஹர ஹரஹர மஹாதேவா சிவசிவ சிவசிவ மஹாதேவா

Wednesday, March 5, 2014

அன்பே சிவம்

           நாம் இந்த பூமியில் இருப்பது ஒரு சத்திரத்தில் சிறிது நாட்கள் தங்கி விட்டு வேறு இடத்திற்கு செல்வது போல் தான். அந்த கொஞ்ச காலங்களில் ஏன் இந்த போட்டி, சண்டை, கோபம், ஆத்திரமெல்லாம். சின்ன விஷயங்களுக்கெல்லாம் அனாவசியமாக சண்டை போட்டு நம் நிம்மதியையும் கெடுத்துக்கொண்டு அடுத்தவர் நிம்மதியையும் கெடுத்து, இதெல்லாம் அவசியமா நினைத்துப் பார்த்தால் இது  எல்லாமே அனாவசியம் என்பது புரியும். நாம் ஏன் இப்படி இருந்தோம், என்று நினைத்து, வருத்தப்படுவோம். இது நமக்குத்தேவையா?
           நம்மால் முடிந்தவரை யாருடனும் சண்டை போடாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அன்பாகவும், ஆசையாகவும் இருக்கவேண்டும். அன்பு ஒன்றே ஆனந்தமயமான வாழ்க்கைக்கு ஆதாரம். நாம் முயற்சி செய்துதான் பார்ப்போமே.

அன்பே சிவம் என்று
ஆராதனை செய்து 
இன்புற்றிருக்க
ஈசனே என்றும்
உன்னை வேண்டுகிறேன்
ஊக்கம் அளித்து
எனது ஆசையை
ஏற்றுக்கொண்டு
ஐம்புலன்களையும் அடக்க
ஒரு நல்லவாய்ப்பளித்து
ஓய்வு இல்லாமல்
ஔடதமென 
உன் பெயரை தியானிக்க அருள்வாய்! 
நீ என்றும் அருமருந்தே!
                                     



மாபெரும் சக்தி

   இந்த உலகத்தையே ஒருவன் பொய் சொல்லி ஏமாற்றி விடலாம், ஆனால் அவன் மனதிற்குள் ஒளிந்திருக்கும் மனசாட்க்ஷி  என்ற சத்தியத்தை அவன் ஆயுள் உள்ள வரை ஒரு நாளும் அவனால் பொய் சொல்லி ஏமாற்ற முடியாது. அது யாராலுமே ஏமாற்ற முடியாத உண்மையின் இருப்பிடம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மாபெரும் சக்தியும் அதுவே.