Thursday, January 9, 2014

ராமாயணத்தில் சுமத்திரை

அவதரித்தார்கள் ரகுகுல பாலன்கள் 
ஆனந்தத்தில் மூழ்கியது அயோத்தி நகரமே! 
தந்தை தசரதர் தானங்கள் பல கொடுக்க 
தாயார்கள் மூவரும் இன்பத்தில் திளைத்திருக்க

கன்னியர் யாவரும் களிப்புடன் கீதம்பாட 
காளயரெல்லாம் மங்கள வாத்யம் இசைக்க
தேவர்களும் மாமுனிவர்களும் பூமாரிபொழிய 
தேவலோகமாய் அயோத்தி காட்ஷி அளிக்க

குலகுரு வசிஷ்டரும் கோலாகலமுடன் வந்து 
குழந்தைகளை மிக்க பெருமையுடன் பார்த்து
ராம-பரத-லஷ்மண-சத்ருக்ண என்று  
நாமம் சூட்டியே அன்புடன் ஆசிர்வதிக்க

அவதரித்தார்கள் ரகுகுல பாலன்கள் 
ஆனந்தத்தில் மூழ்கியது அயோத்தி நகரமே!

ராமாயணத்தில் சுமித்திரை

     ராமாயணத்தில் அதிகம் பேசப்படாதவள் சுமித்திரை. ராமனை பெற்றதால் கோசலைக்கு பெருமை. அந்த ராமனை காட்டிற்கு விரட்டியதால் பிரபலம் அடைந்தாள் கைகேயி. ஆனால் சுமித்திரை அவர்களைப்போல் முக்கியத்துவம் பெறாவிட்டாலும் தன்பெயருக்கு ஏற்றபடி விளங்கியவள். சுமித்திரை என்றால் நல்ல அறிவும் குணமும் உடையவள் என்று அர்த்தம். இத்தகைய பண்புடையவள் ராமாயணத்தில்  கவனிக்கப்படாதவளாகத்தான்  இருந்திருக்கிறார். அப்படியும் அவள் தன் நற்பண்புகளை விட்டுக்கொடுக்கவில்லை.
     இம்மூவருக்கும் பொதுவாக ஓர்ஏக்கம் இருந்தது. ரகுகுலம் தழைக்க தங்களால் ஓர்வாரிசை தரமுடியவில்லையே என்பதுதான் அது. வசிஷ்டர் போன்ற  மகாரிஷிகளும் ஜோசியர்களும் கலந்து ஆலோஜித்து ஓர் முடிவுக்கு வந்தார்கள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்வது என்று. தசரதரும் இதற்கு இணங்க, யாகம் விமரிசையாக  நடத்தப்பட்டது. மனைவியர் மூவரும் கலந்து கொண்டார்கள்.
     தனக்கு மூன்றாவது இடம்தானே என்று நினைத்தாளோ தெரியவில்லை சுமித்திரை, சற்றே ஒதுங்கி நின்றிறுந்தாள். தசரதன் ஆர்வத்துடனும் மிக்க ஈடுபாடுடனும் செய்த யாகம்  அல்லவா இது. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. யாகம் முடிவடைந்தபொழுது யாகத் தீயிலிருந்து ஓர்தேவதை ஒரு குவளை பாயசத்தைக் கொடுத்தாள். அதை வினயமாகப்பெற்று கொண்ட தசரதன், தன் மனைவியரைப் பார்த்தான். ஆமாம் பாயசக்குவளைகளை ஏந்திவந்த தசரதன், கோசலை கைகேயியிடம் மட்டும் இரு பொற்கிண்ணங்களில் சரிசம மாக ஊற்றி அந்தப்பாயசத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். ஒதுங்கி நின்ற சுமித்திரையை அவர் கவனிக்கவில்லையோ. 
     சுமித்திரையின் கண்களில் ஏக்கம் பொங்கினாலும் மனம் மட்டும் பதற்றத்தை தணித்துக்கொள்ள முயன்றது. மனைவி என்ற அந்தஸ்து கிடைத்தும் தாய் என்ற கௌரவம் தனக்கு கிட்டாமல் போய்விடுமோ பரவாயில்லை, தாதி பொறுப்பாவது கட்டாயம் தனக்கு கிட்டும் என்று ஆறுதல் கொண்டாள். கோசலைக்கும், கைகேயியிக்கும் பிறக்கும் குழந்தைகளை சீராட்டி, தாலாட்டி, வளர்க்கும் பொறுப்பு தனக்கு கிடைக்காமலாபோய் விடும் என்று நினைத்து ஆறுதல் அடைந்தாள். மன்னனாகிய கணவனே தன்னை புறக்கணித்துவிட்ட பிறகு மூத்தாள்களும் மன்னனினின் வழியை பின்பற்றினால், சற்றே சோர்ந்து போனாள்சுமத்திரை. சிறிது கண்மூடி தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவள், தன்னை யாரோதொட்டு அழைப்பதை உணர்ந்தாள் - கோசலை பின்னால் கைகேயி.
     "என்ன சுமித்திரை, ஏன் ஒதுங்கி நிற்கிறாய்", என்று கைகேயி கேட்டாள். "ஒதுங்கவில்லையே
நீங்கள் இருவரும் இருக்கும் பொழுது நான் முன்வந்து நின்றால் அதிகப்பிரசங்கித்தனம் ஆகாதா", சுமித்திரை தன்உணர்வுகளை அடக்கிக்கொண்டு வினயமாக பதிலளித்தாள். "அதெப்படி உனக்கும் சமவுரிமை இருக்கிறதே, மன்னர் உனக்கு உறிய பங்கைகொடுக்கச்சொல்லி சென்று விட்டார்" என்று சொன்ன கோசலை, சுமித்திரையின் கையை பிரியமுடன் பற்றி தன்பங்கை பாதியாக பகிர்ந்து சுமித்திரையிடம் பாதியை கொடுத்தாள். கோசலையின் பாச உள்ளத்தை அறிந்து கொண்டாள் சுமித்திரை. கணவரை விட்டுக்கொடுக்காத, அதே சமயம் தனக்கும்  ஆதரவாகப்பேசும் உயர்உள்ளம் எத்தனை பேருக்கு வரும்?  இவளுக்கு பிறக்கும் குழந்தை  நிச்சயமாக தர்மவானாகவும், நல்ல பண்புள்ளவனாகவும் தான் இருப்பான் என்று நினைத்துக்கொண்டாள்.
     கைகேயி சுமித்திரையிடம் வந்தாள். "உனக்கு அக்காள் இல்லாத குறையை இவர்கள் தீர்ப்பார்கள் என்று சொல்லித்தானே எங்களுக்கு உன்னை அறிமுகம் செய்துவைத்தார் மன்னர் தசரதர். அதனால் உனக்கும் சமவுரிமை எல்லாவற்றிலும் உண்டு. அது எங்கள் கடமையுமாகும். இந்தா என்பங்கிலிருந்து பாதியைதருகிறேன் வாங்கிக்கொள்" என்றாள் கைகேயி அன்புடன்.  நெகிழ்ந்து போன சுமித்திரை தன்மீது இவ்வளவு பரிவு காட்டும் கைகேயிக்கு பிறக்கும் பிள்ளையும் தனக்கென எதுவும் வேண்டாத நல்ல குணவானாக விளங்க மானசீகமாக ஆசிர்வதித்தாள். கண்களில் நீர்கோர்க்க அவர்கள் கொடுத்த பாயசத்தை பருகினாள். நடுங்கும் கரங்களுடன்  மூவரும் ஒருவரை ஒருவர்  பாசத்துடன் அணைத்துக்கொண்டார்கள்.
     மாதங்கள் ஓடின. மூவரும் கருவுற்றார்கள். கோசலைக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும்,
சுமித்திரைக்கு லஷ்மண சத்ருக்கனும் பிறந்தார்கள். மன்னர்தசரதனும் பெரும் மகிழ்ச்சி அடைந்து குழந்தைகள் பிறந்த தினத்தை கோலாகலமாக கொண்டாட உத்தரவிட்டார். விழா எல்லாம் இனிதாக நடந்தேறியது. சுமித்திரை தன்குழந்தைகளை எடுத்து கொண்டுவந்து கோசலை கைகேயியின் முன் நின்றாள். இந்தக்குழந்தைகள் நீங்கள் எனக்கு அளித்த பிச்சை. இதோ இலஷ்மணன் இவன் உங்கள் இராமனுடன் உறுதுணையாக இருப்பான், ராமனின் நிழலாக தொடர்வான் - என்று கோசலையிடம் சொன்னாள். பிறகு கைகேயியிடம் திரும்பி, இந்த சத்ருக்கன் உங்கள் பரதனுடன் இணைந்தே வாழ்வான் என்றாள் தழுதழுத்த குரலில் அவர்கள் பொறுப்பில் தன் குழந்தைகளை விட்டு சுமித்திரை நிறைந்த மனதுடன் நின்றாள். என்ன ஓர் உத்தமமானகுணம் இந்த சுமித்திரைக்கு. 
     நான் எப்பொழுதோ படித்து ரஸித்ததை உங்களிடமும் பகிர்ந்த கொள்கிறேன். சில இடங்களில் மாற்றியும் எழுதி இருக்கிறேன்.





  

2 comments:

  1. சுமித்ரையை பற்றி அழகாக எழுதி உள்ளீர்கள்.
    எனக்கு ஒன்று தோன்றுகிறது. ராமனோ .கைகேயி கேட்டபடி தசரதர் வாக்களித்தபடி காட்டுக்கு செல்லவேண்டிய நிர்பந்தம்.அது கோசலைக்கும் அடங்கும்.ஆனால் இலக்குமணனுக்கு அப்படி இல்லை.இருந்தும் தன்னுடைய தாயையும் மனைவியையும் விட்டு காட்டுக்கு சென்ற லக்ஷ்மணன் தியாகம் மிக பெரிது.இது ஒருவேளை ராமரின் மனதில் நெருடி இருக்கவேண்டும்.ஒரு வேளை அதனால் தான்
    கிருஷ்ணாவதாரத்தில் யசோதையாக பிறந்து கண்ணனை சீராட்டி வளர்க்கும் பெருமையை சுமித்ரை பெற்றாளோ?

    ReplyDelete
  2. மாமா, நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறதுஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் சுமித்திரைதான் இலக்குவன் பிறந்தவுடனேயே இவன் உங்கள் ராமனுக்கு உறுதுணையாக இருப்பான், ராமனின் நிழலாகதொடருவான்என்று சொல்லி இருக்கிறாளே,அதைத்தானே இலக்குவன் கடைபிடித்தான்.ஆனாலும் இலக்குவன் செய்தது மிகப்பெரிய தியாகம்தான்.
    நான் இதனை வேறுமாதிரியும்,படித்து, சிந்தித்து எழுதி இருக்கிறேன்.விரைவில் அதை நான் பதிவு செய்கிறேன்

    ReplyDelete