Thursday, January 16, 2014

ரயில் பயணம்

          சுமார் ஐம்பதுவருடங்களுக்குமுன் 1961ல் நடந்த சம்பவம். அப்பொழுதுதான் எனக்கு கல்யாணம் ஆகி நானும் என் கணவரும் சென்னையிலிருந்து  டில்லிக்கு பயணம் செய்தோம். எனக்கு அப்பொழுது வயது பதினாறு. அதற்குமுன் நான் சென்னையைத்தாண்டி எங்குமே சென்றதில்லை. வேறு எந்த மொழியும் எனக்குத்தெரியாது (தமிழ் தவிர). டில்லியில்தான் என் கணவருக்கு வேலை.
          நாங்கள் சென்னை சென்ரலில் டீலக்ஸ் ஏர்கண்டிஷன் ரயிலில் ஏறி உட்கார்ந்தோம். எனக்கு அதுவே மிகவும் திரில்லிங்காக இருந்தது. எங்களை வழி அனுப்ப வந்த உறவினர்கள் மற்றும் சினேகிதர்களுடன் என் கணவர் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தார். நான்பேசுவது வெளியே இருப்பவர்களுக்கு கேட்காது என்று தெரியாமல் நானும் ஏதோ பேசினேன். பிறகு தான் நான் பேசுவது எதுவும் அவர்களுக்கு கேட்காது என்பதை கணவர் மூலம் தெரிந்து கொண்டேன். ஒருவழியாக ரயிலும் கிளம்பியது.
           மறுநாள் காலை காசிப்பட் ஸ்டேஷனில் ரயில் நின்றவுடன் என் கணவர் கீழே இறங்கி பேப்பர் வாங்கி வருகிறேன் பத்திரமாக இரு  என்று கூறிவிட்டு இறங்கினார். நானும் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
            ரயில் சற்று நேரத்தில் கிளம்பி விட்டது. பேப்பர் வாங்க போன என் கணவர் வரவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அழுது கொண்டே ஶ்ரீராமஜயம் சொல்லிக்கொண்டிருந்தேன். எதிர் சீட்டில் இரண்டு சர்தார்ஜிகள் உட்கார்ந்திருந்தார்கள். நான் சர்தார்ஜிக்களையே பார்த்ததில்லை. அவர்களை பார்த்து எனக்கு மேலும் பயம். நல்லவேளை பின்சீட்டில் தமிழ் பேசும் மாமா மாமி எங்களுடன் பயணம் செய்தார்கள். அவர்கள் என்னிடம் வந்து ஏன் அழுகிறாய் என்ன ஆச்சு என்று கேட்டார்கள்.
        நானும் என் கணவர் கீழே இறங்கியதையும் ரயில் கிளம்பியும் அவர் வரவில்லையே எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறிவிட்டு அழுது விட்டேன். அதற்கு அவர்கள் பயப்படாதே அவர் ரயிலைத்தவற விட்டிருப்பார் அடுத்த ரயிலில் வந்து விடுவார் என்றும்  டில்லியில் உங்களை வரவேற்பதற்கு யாராவது வருவார்களா  என்றும் கேட்டார்கள்.  ஸ்டேஷனுக்கு என் மைத்துணர்கள் வருவார்கள் ஆனால் எனக்கு யாரையுமே சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாது கல்யாணத்தன்று பார்த்தது என்று சொன்னேன். நாங்கள்அவர்களை கண்டுபிடித்து உன்னை அவர்களிடம் விட்டுவிடுகிறோம் அழாதே என்று சொன்னார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் அவர் என்னை ஏமாற்றி விட்டு போய் விட்டாரோ என்று நினைத்து அழுது கொண்டிருந்தேன்.
           அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன் கீழே இறங்கி விடுவது என்று முடிவு செய்தேன். அரைமணி நேரம் அப்படியே ஶ்ரீராமஜயம் சொல்லிக்கொண்டும் மேலே என்ன செய்வது என்று யோஜித்துக்கொண்டும் உட்கார்ந்திருந்தேன்.  என்ன யோஜனை என்று கேட்டுக்கொண்டே என் கணவர் என் தோளை தட்டினார். எனக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னும்வேகமாக அழ ஆரம்பித்து விட்டேன். பின் சீட்டில் இருந்த மாமா என்ன ஆயிற்று சார் ஏன் இத்தனை நேரம் நீங்கள் வருவதற்கு உங்கள் மனைவி பயந்துவிட்டார் என்றார்.
           என் கணவர் நடந்ததை கூறினார். ரயில் கிளம்பியதும் அவர் அடுத்த கம்பார்ட்மெண்டில் ஏறி வந்து கொண்டிருந்தாராம் அங்கு அவருடைய பழைய சினேகிதர் ஒருவரை பார்த்துவிட்டார் அவருடன் பேசிக்கொண்டிருந்ததில் நான் தனியாக உட்கார்ந்திருப்பதை மறந்து விட்டாராம். சிறிது நேரத்தில் ஞாபகம் வந்தவுடன் வந்துவிட்டேன்என்று சர்வ சாதாரணமாகச்சொன்னார். எனக்கோ அப்பொழுது தான் வேறொரு கம்பார்ட்மென்டிலிருந்து வெச்டிபுல் வழியாக இங்கு வரமுடியும் என்பதே தெரியும்.     அந்த அனுபவத்தைநினைத்தால் இப்பவும் எனக்கு நான் கீழே இறங்கி இருந்தால் என்ன ஆகி இருக்குமோ என்று தோன்றும்.
             ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. இதில் வேடிக்கை என்ன என்றால் நான் என்னை அறியாமல் ஶ்ரீராமஜயம் சொல்லிக்கொண்டிருந்தேன் என் கணவரின் பெயரும் ஶ்ரீராமன்.
           

No comments:

Post a Comment