Monday, August 11, 2014

பதவி உயர்வு

சேகர் மனம் குன்றி ஏமாற்றத்துடன் சோர்ந்து போய்  ஆபீஸிலிருந்து வீடு வந்து சேர்ந்தான்.அவன் மனைவி ஏன் இப்படி சோர்ந்து போய் இருக்கிறீர்கள்,தலைவலியா என்று கேட்டதற்கு ஒன்றுமே பதில் சொல்லாமல் மாடியேறி தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுகொண்டு அன்று அலுவலகத்தில் நடந்ததை நினைத்துப்பார்த்தான்.

       ஒவ்வொரு வருடமும் அவனுக்குத்தான் நன்றாக வேலை செய்ததற்கான சான்றிதழ் கிடைக்கும்.இந்த வருடமும் நிச்சயமாக தனக்குத்தான் கிடைக்கும், என்று மிக ஆவலுடன்
எதிர் பார்த்தான். ஆனால் அவனின் சக ஊழியன் ஶ்ரீதருக்கு இந்த வருடம் நல்ல உழைப்பின் சான்றிதழ் கிடைத்தது தான் அவனுடைய ஏமாற்றத்திற்கான காரணம்.
       சிறிது நேரம் யோஜனையில் ஆழ்ந்தவன்,பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை சமாளித்துக்கொண்டு,நாளை போய் மேனேஜரிடமே கேட்டு விடுவது என்று நினைத்துக்
கொண்டு எழுந்து முகம்,கை,கால் அலம்பிக்கொண்டு கீழே வந்தான்.
         அவன் வருவதற்கு காத்திருந்தது போல் அவன் மனைவி சுகுணா என்ன உங்கள் பையன் பண்ணி இருக்கும் காரியத்தை பாருங்கள் என்று ஆரம்பித்தாள். இந்த எக்ஜாமில் கணக்கு பேப்பரில் இவன் மார்க்கை கூட்டினால்,97 மார்க் வருகிறது.ஆனால் மிஸ் 93 என்று தப்பா போட்டிருக்கா,இவன் அதை கரெக்ட் செய்திருக்க வேண்டாமா! இவன் மிஸ்ஸிடம் அதை சொல்லவில்லை அதனால் இவன் செகண்ட் ராங்க் போயிட்டான்,என்று பொருமினாள்
    ஏண்டா மிஸ்கிட்டே கேட்கவில்லை என்றான் சேகர் மகனிடம். இல்லை அப்பா இவ்வளவு
நாள் நான்தானே பஸ்ட்வந்திண்டிருக்கேன் இந்தத்தடவை ரகு பஸ்ட்ராங்க் எடுத்ததால் அவன் மிகவும் சந்தோஷமாகி எல்லோருக்கும் உடனே ஸ்வீட் வாங்கிக்கொடுத்தான். அவனின் அந்த சந்தோஷத்தை கெடுக்கவேண்டாம்னுதான் மிஸ்கிட்ட என்னுடைய மார்க்கை கரெக்ட் பண்ணசொல்லலை! அதனாலே என்ன அப்பா....அடுத்ததடவை நான் பஸ்ட்ரேங்க் வாங்கிடறேன் என்றான் அவ்ன் நிதானமாக.
           சுரீரென்று உறைத்தது சேகருக்கு,இவனுக்கு இருக்கும் மனப்பக்குவம்கூட தனக்கு ஏன் இல்லாமல் போயிற்று என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு சபாஷ் என்று அவனை முதுகில் தட்டிக்கொடுத்தான். சுகுணாவுக்கோ ஒன்றுமே புரியவில்லை.எப்பொழுதுமே பஸ்ட்ராங்க் தான் வரவேண்டும் என்று சொல்பவருக்கு இன்று என்ன ஆகிவிட்டது என்று
அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

No comments:

Post a Comment