Sunday, June 8, 2014

விஷமக்கண்ணனின் வேடிக்கை விளையாட்டுகள்.

                      விஷமக்கண்ணனின் வேடிக்கை விளையாட்டுகள்.
    நான் எழுதப்போவது எனக்கு மிகவும் பிடித்த,குறும்புகளும்,பொல்லாத்தனங்களும்,செய்து இடையர் குல பெண்களையும்,சிறுவர்,சிறுமிகளையும்,பாடாய்படுத்திய மாயவன் கண்ணன் செய்தகுறும்புகளில் இருந்து சில உதாரணங்கள். உங்களுக்கும் நிச்சயம் இது பிடிக்கும் என்பது எனக்குத்தெரியும்.திரும்பத் திரும்ப படித்தாலும் திகட்டாத வேடிக்கையாய் கண்ணன்
செய்த திருட்டுத்தனத்தையும்,விஷமங்களையும்,மாயச்செயல்கள் சிலவற்றையும்,இப்போது பார்ப்போமா?

          ஆயர்பாடியில் ஒன்றும் அறியாதவன் போல் கண்ணன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.அங்கே தண்ணீர் குடத்துடன் வந்த ஒருத்தி சற்றே நின்று,கண்ணா இங்கே வா என்று அழைத்தாள்.கண்ணனும் மிகவும் பணிவுடன் அவளருகில் வந்து நின்றான். அவள் கேட்டாள்,காலையில் நான் இல்லாத பொழுது நீதானே என் வீட்டில் புகுந்து வெண்ணெய்,பால்,தயிர் எல்லாவற்றையும் எடுத்து தின்று விட்டு பானையையும் கீழே போட்டு உடைத்து விட்டு வந்திருக்கிறாய் என்றாள் அவள்.
       அதற்கு கண்ணன்,இல்லையே!நான் அப்படியெல்லாம் செய்யவேமாட்டேன்.நீ என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய்.நான் விடியற்காலையிலேயே இவர்களுடன்
மாடு,கன்றுகளை மேய்க்கசென்று விட்டேன்.நீ வேண்டுமானால் இவர்களிடம் கேட்டுப்பார் என்றான்.மற்ற சிறுவர்களும் ஆம் காலையிலேயே எங்களுடன் கண்ணன் மாடு மேய்க்க வந்து விட்டானே என்றனர் கோரஸாக.
        அதற்குள் அங்கு வந்த மற்றொரு பெண்மணி கண்ணா,நீ இங்குதான் இருக்கிறாயா!
ஏனடா,காலையில் நான் வெளியே சென்று பால் விற்று விட்டு வருவதற்குள் நீ என் வீட்டின் பின்புறம் சென்று மரத்தில் இருந்த மாங்காயையெல்லாம் பறித்துக் எடுத்துக்கொண்டு வந்து விட்டாயே?நீ இப்படி செய்யலாமா,இரு இப்போதே நான் உன்னை யஸோதையிடம் அழைத்துசெல்கிறேன்,என்று கூறிக்கொண்டிருக்கும்பொழுதே,மற்றொறுத்தி அங்கு வேகமாக கண்ணா உன்னைத்தானடா நான்ரொம்ப நேரமாகத்தேடிக்கொண்டிருக்கிறேன்.
ஏன் இப்படி பாடாய் படுத்துகிறாயோ,நேற்று ஆனால் என் பெண்ணை கிள்ளி அழவிட்டாய்.
இன்று அவள் ஆசை ஆசையாக் கேட்டாளே என்று வெல்லசீடை,உப்புசீடை,முறுக்கு,
எல்லாம் செய்து வைத்திருந்தேன், காலையில் நான் பூஜையை முடித்து வருவதற்குள் அதை யெல்லாம் எடுத்து தின்று விட்டு காலி பாத்திரத்தில் கல்லையும்,மண்ணையும் நிறப்பி மூடி
வைத்து விட்டு இங்கு வந்து ஒன்றும் அறியாதவன் போல் உட்கார்ந்திருக்கிறாயா! இரு உன்னை என்ன செய்கிறேன் பார் என்றாள் கோபமாக,இப்படி இன்னும் நான்கைந்து பேர்கள்
வந்து தங்கள் வீட்டில் களவு போனது பற்றியும்,வீட்டில் இருந்த பாத்திரங்கள்,மற்ற எல்லா சாமான்களும் தாறுமாராக கீழே கிடப்பதைபற்றியும்,கூறி விட்டு இனிமேல் இந்த பொல்லாத
கண்ணனை நாம் சும்மா விடக்கூடாது. வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து கண்ணன்
வீட்டிற்கு சென்று இதை சொல்லலாம்  என்று ஒருவள் கூற,அனைவரும் கிளம்பினார்கள்.
      அவர்கள் யஸோதையின் இல்லத்தருகே வருகையில் ஒருத்தி சொன்னாள்,ஆம்,நாம் எல்லோரும் சேர்ந்து வந்து யஸோதையிடம் முறையிட்டால்,அவள் முன்பு கண்ணனை உரலில் கட்டிப்போட்டது போல் தன் இல்லத்தில் இப்பொழுதும் கட்டிப்போட்டுவிட்டால் நம்மால் சிலநாட்களுக்கு கண்ணனைப்பார்க்கவே முடியாதே,நம்மாலோ,அல்லது நம் பெண்,பிள்ளைகளாலோ கண்ணனைப்பார்க்காமல் இருந்து விடமுடியுமா? அப்போதே நாம் எல்லோரும் கண்ணனை காணாமல்,அவன் வீட்டிற்கு சென்று யஸோதையிடம் மன்றாடி கேட்டு அவனை விடுவித்து அழைத்து வந்தோமே! அது மறந்து விட்டதா? நம் பிள்ளைகள் தான் இதற்கு ஒத்துக்கொள்வார்களா? பின் என்னதான் செய்வது.சரி நான் ஒரு யோஜனை சொல்கிறேன் என்றாள் ஒரு பெண்.என்ன அது என்று கேட்டார்கள் மற்றவர்கள்.
       நாம் எல்லோரும் அவரவர் வீட்டில் தினமும் சமையல் செய்தவுடன் கண்ணனுக்காக ஒரு பங்கை எடுத்து வைத்து விட்டு இதை நீ சாப்பிடு, வேறு எதையும் தொடக்கூடாது என்று சொல்லலாம் என்றாள். அதற்கு மற்றவள்,அவன் சின்னப்பையன்,எப்படிஎல்லா வீட்டு உணவையும்,தினமும் சாப்பிட முடியும்.அவனுக்கு வயிற்றை வலிக்காதா என்றாள்( ஒன்று அவளுக்கு  மறந்து விட்டது.இந்த உலகத்தையே உண்டவனுக்கு இந்த சாப்பாடு ஓர்
கடுகத்தனைகூட இல்லை என்பது)
அங்கிருந்த மற்றொறுத்திக்கு இது ஞாபகம் வர அவன் உலகத்தையே உண்ட மாயவன் அல்லவாஉனக்கு அது மறந்து விட்டதா,என்றாள்.சரி அவள் சொல்வதும் சரிதான் அப்படியே செய்யலாம்,ஆனால் அவனுக்கு மிகவும் பிடித்தவெண்ணெயையும் எடுத்து வைக்க நாம் மறந்து விடக்கூடாது,என்று அவர்கள் ஓர் முடிவுக்கு வந்து இதை கண்ணனிடமே சொல்லி தினமும் தன் பங்கை மட்டுமே அவனை சாப்பிடச் சொல்லவேண்டும் ,நமக்கும் நம் செல்லப்பிள்ளையான கண்ணனுக்கு நாம் தினமும் எல்லாம் செய்து கொடுத்தோம் என்ற சந்தோஷம் கிடைக்கும், அவனும் நம் வீட்டிற்கு வந்து லூட்டி அடிக்காமல் சாப்பிட்டு விட்டு போய் விடுவான்,இது தான் சரி என்று எல்லோருமாய் ஒரு மனதாக தீர்மானித்து  இதை அவனிடமும்  நாம் இப்பொழுதே சென்று கூறி விடுவது நல்லது, என்று முடிவு செய்து கண்ணனிடம்  சென்றார்கள். அனைவரும் தாங்கள் எடுத்த முடிவைப்பற்றி கூற அவனும் ஒன்றும் அறியாதவன் போல் சிரித்துக்கொண்டே சரி,சரி என்று தலையை ஆட்டினான்.
       அவனை பற்றி ஒன்றும் அறியாத அப்பாவிப்பெண்கள் தாங்கள் பெரிதாக எதையோ
சாதித்து விட்டதாக பேசி சிரித்துக்கொண்டு,இனி கண்ணனின் விஷமங்கள் தங்களிடம் செல்லாது என்று பெருமையுடன் கூறிக் கொண்டே நிம்மதியுடன் வீட்டிற்கு சென்றார்கள்.
     கிரிதரனோ தான் எல்லார் வீட்டிற்குள்ளும் சென்று,வருவதற்கு அங்கீகாரமும் கிடைத்து விட்டது.இனி திருட்டுத்தனமாக உள்ளே புக வேண்டியதில்லை, உள்ளே என்னவிஷமங்கள் வேண்டுமானாலும்  இனி செய்யலாம்.அவனுக்கு கிடைக்கப்போவது என்னவோ இரண்டு மடங்கு சாப்பாடு,ஒன்று தன் பங்கு, அடுத்தது மற்றவர்களின் பங்கு,என்று நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான். முகில் வண்ணனின் தொடரும் விளையாடல்கள் இது போல்  இன்னும் எத்தனை எத்தனையோ.
   


   
   
   


     
       

     
       

No comments:

Post a Comment