Thursday, May 17, 2012

ஶ்ரீராமனின் பட்டாபிஷேகம்

ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே - எங்கள்
சீதாராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே 

வீடுகளை சுத்தம்செய்து வாசலில் கோலமிட்டு 
வாழைமரங்கள் நட்டு மாவிலை தோரணம்கட்டி 
வீதியெங்கும் பந்தல்போட்டு விதவிதமாய் வர்ணம்பூசி 
ஜோதிமயமாய் செய்து தேவலோகம் போல்ஆக்கி
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

புத்தாடை கட்டி மகிழ்ந்து பூச்சூடி பெண்கள் திகழ்ந்து 
பாட்டுக் கச்சேரியும் செய்து பரதநாட்டியமும் ஆடி 
கும்மி அடித்து கொண்டாடி கூத்துக்கள்யாவும் செய்து 
மங்களவாத்யம் முழங்க மங்கையர் தீபம் ஏற்ற
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

புண்ணியராமனை கண்டு புகழ்மாலைகள் சூட்டிட 
புத்துயிர் தனை பெற்ற மாநகர் அயோத்தியில் 
வானரர் யாவருமே வானதிர கூச்சல் போட 
மன்னாதிமன்னர்கள் யாவருமே வந்தங்கு சேர
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து அங்கு 
திக்கெட்டு திசையும் சென்று நன்னீர் கொண்டுவர 
தங்கக்குடங்களில் புண்ணிய தீர்த்தம் நிறைத்து 
புனித மந்திரங்கள் கூறி ராமனுக்கு அபிஷேகம்செய்ய
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ...

பொன்னாடைகட்டியராமன் பொலிவோடுகாட்ஷிகொடுக்க 
அன்னைசீதையும் கண்ணைபறிக்கும் அலங்காரமுடன்வர 
தங்கமயமான தம்பதிகள் இருவரும் தளிர்நடைபோட்டுவந்து 
வைரம் இழைத்த சிங்காசனத்தில் வகையாய் அமர
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

பலவகையான பட்ஷிணங்களும் பட்டியலிடமுடியாதபடி 
பாயசங்களும் பணியாரங்களும் கொண்டு வந்துவைக்க 
விதவிதமான பழவகைகளும் விரைவில் வந்துசேர 
விண்ணும்மண்ணும் அதிர வானவேடிக்கைகள் செய்து
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

பரதன் வெண்குடைபிடிக்க லக்குவனும் சத்ருகனும் சாமரம் வீச
ஹனுமன் ஶ்ரீராமனின் பதம் பணிந்து ஆவலுடன் அமர்ந்திருக்க 
குலகுரு வசிஷ்டரும் மணிமுடிஎடுத்து ஶ்ரீராமனுக்கு சூட்டிட 
மங்களவாத்யம் முழங்கியெங்கும் மகிழ்சிவெள்ளம் பெருக
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

தாயார்களிடம் ஆசிகள்பெற்ற தம்பதிகளைக்கண்டு 
இந்ராதிதேவர்களும் மாமுனிவர்கள் மன்னர்கள்யாவரும் 
இருகரம் கூப்பி வணங்கி சீதாராமன்வாழ்க என்று 
சிரம்தனை தாழ்த்தி வணங்கி சிந்தை குளிர நின்றனறாம் 
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே - எங்கள் 
சீதாராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே

மங்களம்:
அயோத்தியில் உதித்த ஆனந்தராமனுக்கு - கோசலைபெற்ற கோதண்டராமனுக்கு 
ஜானகியை மணந்த ஜானகிராமனுக்கு - மாருதி சேவித மங்களராமனுக்கு 
ராவணனை அழித்த ராஜாராமனுக்கு - பவித்ரமான பட்டாபிராமனுக்கு 
பங்கஜலோசன பரந்தாமனுக்கு - ஜெயமங்களம் நித்ய சுபமங்களம் 

ஜெயமங்களம் நித்ய சர்வமங்களம் - ஜெயமங்களம் நித்ய சுபமங்களம் 
ஜெயமங்களம் நித்ய சர்வமங்களம் - ஜெயமங்களம் நித்ய சுபமங்களம் 

No comments:

Post a Comment