திரேதாயுகத்தில் விதேக நாட்டு மிதிலை நகரில் ஜனக மன்னன் யாகசாலை அமைப்பதற்கு கலப்பையால் பூமியில் உழுகையில் அங்கு பூமிதேவியின் அம்சமாக ஓரு பெண் குழந்தை தோன்ற அக்குழந்தைக்கு சீதை என்று பெயரிட்டு ஜனகர் தன் புத்ரியாக ஏற்று கொண்டு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தார். அந்த சீதையை அயோத்தி மன்னன் தசரதரின் குமாரன், ஶ்ரீமந்நாராயணனின் ஒரு அவதாரமான ஶ்ரீராமனுக்கு மணமுடித்தார் ஜனகர். சீதையும் ஶ்ரீராமனுக்கு ஏற்ற துணைவியாய் இருந்து வந்தாள்.
ஒரு சமயம் ஶ்ரீராமனுக்கு காட்டிற்கு போகவேண்டிய நிற்பந்தம் வந்ததால் சீதையும் அவருடன் சென்றாள். அங்கு அவள் பலவகையான இன்னல்களுக்கு ஆளாகி மிகவும் கஷ்டப்பட நேர்ந்தது. ஜனக புத்ரி ஜானகியும் மிகப்பொறுமையாகஇருந்து எல்லாவற்றையும் சமாளித்தாள். பூமிதேவி அந்த அவதாரத்தை நிறைவு செய்யும் தருணம் ஶ்ரீராமரிடம் உங்களின் இந்த அவதாரத்தில் நான் நிறைய இன்னல்களை அனுபவித்து விட்டேன், எனது அடுத்த பிறவியில் நான் உங்களை பிரியாமல் என்றும் உங்களுடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள்.
சுமார் ஆயிரத்து ஐனூரு வருடங்களுக்குமுன், கலியுகத்தில், ஶ்ரீவில்லிப்புத்தூர் என்ற நகரில் விஷ்ணுசித்தர் என்ற அந்தபெரியாழ்வார், தன் நந்தவனத்திலிருந்து அன்றலர்ந்த
மலர்களையும், துளசி இலைகளையும் பறித்து, மாலைகளாகத் தன் கையினாலேயே தொடுத்து திருமால்
வடபத்திரசாயிக்கு தினம்தோறும் அணிவித்து மிக்கமகிழ்ச்சி அடைந்தார்.
ஒருநாள் காலை அவர் வனத்திற்கு சென்று மலர் கொய்யும் பொழுது ஒளி வெள்ளமாய் தெய்வீக மணம் கமழும் ஒரு பெண் குழந்தையை துளசி செடியின் கீழ்கண்டு மெய்மறந்து சில நிமிடங்கள் நின்றார். துளசி மாலுக்கு உறியது அன்றோ, இக்குழந்தையை அடைய நான் என்ன பாக்கியம் செய்தேனோ என்று புளகாங்கிதம் அடைந்தார். அவர் அன்றாடம் சென்று வழிபட்டு வரும் வடபத்ரசாயிதான் இக்குழந்தையை தனக்கு அளித்திருக்கிறார் என்று எண்ணி மகிழ்ந்தார். நள வருடம் ஆடிமாதம் செவ்வாய்கிழமை பூரநட்ஷத்திரத்தில் பூதேவியின் அம்சமாக பிறந்த குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் நாளும் சீராட்டி வளர்த்து வந்தார். தந்தையிடம் கோதை கண்ணபிரானின் திருவிளையாடல்கள் பற்றியும், கோகுலத்தில் ஆய்ச்சிகளுடன் அவன் கலந்துறவாடிய பல செய்திகளையும் கேள்வியுற்று தானும் அந்த இடைப்பெண்கள் போலப் பேறுபெற ஆசைப்பட்டாள். தந்தையே கண்டு வியக்கும்படி இளமையிலேயே எம்பெருமான் வடபத்ரசாயியிடம் பக்தி கொண்டு அவரின் பெருமைகளைப்பற்றியே எக்கணமும் சிந்திப்பது, துதிப்பது, அவரையே சதாசர்வகாலமும் நினைத்து பாடுவது, என்று தன்முழுநேரத்தையும் அவரைப்பற்றிய நினைவிலேயே கழித்துவந்தாள் கோதை.
எம்பெருமானின் பெருமைகளையே எப்பொழுதும் நினைத்துத் அவனுக்கே மாலையிட்டு மணம் செய்து கொள்ளக் கருதினாள். பெரியாழ்வார் வடபத்திரசாயிக்காக கட்டி வைத்த மாலையை அவர் இல்லாத சமயம், தான் அணிந்து கொண்டு கண்ணாடிமுன் அழகு பார்த்துவிட்டு ,மறுபடியும் அதை நலுங்காமல் பூக்கூடையில் வைத்து விடுவாள். இதுபற்றி தெரியாத ஆழ்வார் அம்மாலையைக் கொண்டு போய் கோயில்பெருமானுக்கு சாத்திவர திருமாலும் மிகவும் விருப்பமுடன் அதை ஏற்றுக்கொண்டார்.
ஒருநாள் வழக்கம் போல் குடலையிலிருந்து பூமாலையை எடுத்து ஆண்டாள் சூடியவாறு அழகு பார்க்கும் நேரத்தில், பெரியாழ்வார் திடீரென்று வரவும் இதனைப்பார்த்தார். கோதையிடம் கோபம் கொண்டவர் இறைவனின் பூமாலையைச் சூடுவது அபச்சாரம் என்றுகூறி அன்றைக்கு அப்பூமாலைகளை கோவிலுக்கு எடுத்து செல்ல விருப்பப்படவில்லை. தன்னால் அன்று இறைவனுக்கு மாலைசாற்ற முடியவில்லையே என்று மனம் வருந்தினார். அன்றிரவு ஆழ்வார் கனவில் வடபத்ரசாயி தோன்றி அன்று தனக்கு மாலை சூட்டாத காரணம் கேட்கவும், தன்மகள் செய்த தவறை கூறி மன்னிப்பு கேட்டார். ஆனால் இறைவனோ உம் மகள் சூடிக்கொடுத்த மாலையே தனக்கு உகந்தது. அதுவே நறுமணமிக்கது. அதையே தனக்கு சாற்றும்படி கூறி மறைந்தார். திடுக்கிட்டு கண் விழித்த பெரியாழ்வார், தன்மகளின் அரிய பாக்கியத்தை எண்ணி வியந்து அவள் பிராட்டியின் அம்சமாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
மணப்பருவம் அடைந்த கோதை அழகும், அறிவும், நற்பண்பும், இறை பக்தியும், உடன் வளர்ந்து வரப்பெற்றாள். தனக்கு ஏற்றவன் அந்த கடல்நிறவண்ணனான கண்ணன்தான், இனி அவனை ஒரு பொழுதும் தன்னால் மறக்க முடியாது என்பதை உணர்ந்தாள். பெரியாழ்வார் கோதைக்கு மணம் செய்வது பற்றி அவளிடம் கேட்க சூடிக்கொடுத்த சுடர்கொடியோ தான் அந்த கண்ண பெருமாளுக்கே உறியவள் என்றாள். பெரியாழ்வாரோ செய்வதறியாது திகைத்து நின்றார்.
கோதையின் வேண்டுகோளின்படிபெரியாழ்வார்108 திருப்பதி களில் உள்ள பெருமாள்களின் வைபவங்களை அவளுக்கு எடுத்துக்கூறினார். வடமதுரைக் கண்ணன் ,வரலாறு கேட்டதும் மெய் சிலிர்ப்பும் திருவேங்கட முடையானை க்கூறியதும் முகமலர்ச்சியும் அடைந்தாள். சோலைமலைஅழகரின் வடிவழகில் ஈடுபட்டாள். திருவரங்கன்மகிமையை க்கேட்டுப்பேரானந்தம் அடைந்தாள். திரு அரங்கனானகண்ணன் மேல்தான் வைத்த அன்பு அதிகமாகி அவள் தன்னையே இடைச்சியாக கருதி நோன்பு நூற்கத்தொடங்கினாள். அதுவே, திருப்பாவை என்னும் பிரபந்தமாயிற்று. கண்ணனை அடைய விரும்பி மேகங்கள், குயில், ஆகியவற்றைதூதுவிடுத்து, தன்தாபங்களை வெளியிட்டாள். அவளின் தெய்வீகப்பாடல்களே நாச்சியார் திருமொழி என்ற பிரபந்தமாக ஆயிற்று.
பெரியாழ்வாரின் கனவில் மீண்டும் அரங்கன் தோன்றி கோதையை திருவரங்கத்தில் இருக்கும் தன் கோவிலுக்கு அழைத்து வரும்படியும், அவளை தான் ஏற்பேன் என்றும் கூறினார். கோதையும் தான் அன்றிரவு பலவகை கனவு கண்டதாக தோழிகளிடம் கூறினாள். அந்தக்கனவில் தன் திருமணத்தைப் பற்றியும், முறையே கண்டதாக பத்து பாடல்களில் அவள் பாடியுள்ளார். அவற்றில்சிலவற்றை இங்கே காண்போம்:
வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து நாரணன் நம்பி நடக்கின்றான் என் எதிர்
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனா கண்டேன் தோழிநான்
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத முத்துடை தாமம் நிறைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன்நம்பி மதுசூதன்ன் வந்தென்னை கைத்தலம்பற்ற கணாகண்டேன் தோழி நான்
அதே சமயம், திருவரங்க அர்சகரும் தான்கண்ட கனவினைதன் கனவு நீங்கி துயில் எழப்பெற்று நினைத்து ஆச்சர்யம் அடைந்து அதை மற்றவர்களிடமும் கூறினார். திருவரங்கத்தில் எல்லோரும் கூடி
ஒரு மனதாக ஶ்ரீவல்லிப்புத்தூர் சென்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் அந்த கோதை நாச்சியாரையும் விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வரையும், தக்க மரியாதையுடன் திருவரங்கத்திற்கு அழைத்து வரவேண்டும் எனத்தீர்மானித்தார்கள். பெரியாழ்வாருக்கும், அவர்கள் வரும் செய்தியை ஓர் மடலில் எழுதி முன்பே அனுப்பினர்.
திருமகள் கோதையோஇச் செய்தியை க்கேட்டு, அளவற்ற உற்சாகம் அடைந்து சிறந்த அணிகலன்களை அணிந்துகொண்டு, நீலமேகனான மாலனுக்குப் பிடித்த நீல நிறத்திலான உயர்ந்த பட்டாடையை உடுத்தி தன்னை அலங்கரித்துக் கொண்டு இடது பக்கத்தில் கொண்டைகட்டி அதில் கண்ணனுக்குப்பிடித்த மலர்களைச்சுற்றிக்கொண்டு தன் முகத்தை கன்னாடியில் பார்த்து, வெட்கித்து, தன்னை அழைத்துச்செல்ல அவர்கள் எப்பொழுது வருவார்கள் எனக்காத்திருந்தாள்.
திருவரங்கத்திலிருந்து அர்சகரும் மற்றவர்களும் முத்துப்பல்லக்கு, வண்ணக்குடை, வாத்தியங்கள், பலபட்டாடைகள், அணிகலன்கள், தாம்பூலம், பழவகைகள், இன்னும் பலவாசனை திரவியங்கள் சகிதம் அடியார்கள்புடை சூழ ஶ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்து பெரியாழ்வாரையும் திருமகள் கோதையையும் திருவரங்கத்திற்கு அழைத்து சென்றனர். கோதாய் நீ சூடிக்கொடுத்த மாலையை எம்பெருமான் அணிந்து எத்தனை ஆனந்தமுடன் தரிசனமளிக்கிறார், அவரை வசீகரிக்க இது ஒன்றே போதுமானது அன்றோ! ஆனால் நீயோ பாமாலையாலும் அவரைத்தொழுது ஶ்ரீரங்கனாதரின் கிருபைக்கு பாத்திரமாகி விட்டாய் - என்னே உன் பக்தி! என்று புளகாங்கிதம் அடைந்தார், பெரியாழ்வார். அங்கு அரங்கனை கண்ட கோதை அவரின் அழகில் மயங்கி சேவிக்கையில் அரங்கனின் அழகு இரும்பை காந்தம் இழுப்பதுபோல் கோதையை இழுக்க அரங்கனின் நாகணையின் மீது மெதுவாக அடிவைத்து அன்னமென நடந்து ஆனந்தமாய் அரங்கனுடன் ஐக்கியமாகி அவரைஆட்கொண்டு ஆண்டாள் எனப் பெயரும் பெற்றாள்.
மத்தள மேளங்கள் துந்துபி போன்ற அனைத்து வாத்தியங்களும் வானைப்பிளந்தது. வாழ்க கோதை நாச்சியார்! வாழ்க அரங்கனை ஆட்கொண்ட ஆண்டாள்! போன்ற பல கரகோஷங்கள் வாத்தியங்களுடன் இணைந்து ரீங்காரமிட்டது. திருவரங்கனும் பெரியாழ்வாரை நோக்கி, ஜனகரைப்போல் நீரும் எனக்கு மாமனார் ஆனீர் என்று அருளினார். பூமிதேவியின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து கலியுகத்தில் ஶ்ரீமன் நாராயணன் ஶ்ரீரங்கனதராய் தோன்ற பூமாதேவியை கோதையாகப் பிறவி எடுக்க வைத்து தன்னை ஆட்கொள்ள வைத்தார் அரங்கன்.
நாமும் சூடிக்கொடுத்த சுடர்கொடியாம் கோதை நாச்சியாரை வேண்டி வணங்கி அவர் நமக்களித்த பொக்கிஷமாம் திருப்பாவை, மற்றும் நாச்சியார் திருமொழி, ஆகிய இனிய பாசுரங்களை கற்றுத்தேர்ந்து அவரின் கருணையையும், கடைக்கண் பார்வையையும் பெற்று சகல சௌபாக்கியங்களையும் அடைவோம்.
வளர்க நம் இறை பக்தி!
வாழி திரு நாமம்
திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர் பதங்கள் வாழியே!
- ஆண்டாள் அருளிய திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்தாகும்.
- மார்கழிமாதம் திருப்பாவையினாலே பெருமை பெற்றது.
- கண்ணன் சொன்னது பகவத்கீதை, கோதை சொன்னது பகவதீ கீதை எனப்புகழ் பெற்றது.
- ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் உள்ள 10 பாடல்களையும் கன்னியர்கள் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் அவர்களுக்கு திருமணம் கைகூடும்.
- ஆண்டாளைக்குறித்த சுவாமி வேதாந்த தேசிகரின் கோதாஸ்துதியில் 29 பாடல்களே உள்ளன. ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் 30 க்கு இணையாக அமையக்கூடாது என்பதாலேயே இப்படி அவர் இயற்றினார்.