Friday, February 21, 2014

ஆறுமுக வேல்! வேல்!

அன்புடனே நாம்பணியும் ஆறுமுக வேல் வேல்!
இன்றி அமையாத ஈசனுமை பாலன் வேல்!
உன்னதமாக ஊக்கமுடன் காக்கும் வேல்!  
எங்கும் நிறைந்திருக்கும் ஏற்றமிக்க வேல் வேல்!
ஐயங்களை தீர்த்திடும் ஒப்பற்ற வேல் வேல்!
ஓம்காரமாய் விளங்கும் ஔடதமே அந்த வேல்!

குமரவேல்! முருகவேல்! வெற்றிவேல்! வீரவேல்!
அன்புடனே நாம் பணியும் ஆறுமுக வேல்! வேல்!


சாரங்கனா சண்முகனா

பக்தி ரசமுடனும் உள்ளன்புடனும் பரவசமுடனும் நாம் தரிசனம் செய்வது              

பச்சைமாமலை மேனியன் சாரங்கனையா - படை வீடு  கொண்ட பாலன் சண்முகனையா
கோபியருடன்குலாவிய கோபாலனையா - கோலமயில் வாகன சரவணனையா                        

குன்றை குடையாய் எடுத்த கிரிதரனையா - குன்றுதோர் ஆடிடும் அந்த குமரனையா
விந்தை பல காட்டிய தாமோதரனையா - தந்தைக்குபதேசம் செய்த ஸ்கந்தனையா

பக்தி ரசமுடனும் உள்ளன்புடனும் பரவசமுடனும் நாம் தரிசிப்பது
நம் இரு கண்களாய் ஆன சாரங்கராஜனையும் சண்முகநாதனையுமே!       

ஶ்ரீராம ரசமே!

நாவிற்குகந்த ரசம் என்ன ரசமோ - நம்  
நாவிற்குகந்த ரசம் என்ன ரசமோ!
     
பாங்குடன் நாம் செய்த பருப்பு ரசமா
பரவஸமாய் செய்த அந்த தக்காளி ரசமா     

தைரியமுடன் செய்த திப்பிலி ரசமா
சிரத்தையுடன் நாம் செய்த ஜீரக ரசமா  

கரும்பை பிழிந்து செய்த கரும்பு ரசமா
கருத்துடன் நாம் செய்த பழ ரசமா   

எத்தனை வகை ரசங்கள் செய்தாலும் - நம் 
நாவிற்கும் மனதிற்கும் காதிற்கும் உகந்தரசம் 
ராமதாசன் அனுமன் சதா ஜபித்திடும் 
ராம ரசமே! ஶ்ரீராம ரசமே!

Friday, February 14, 2014

அல்லிக்கேணி மன்னன்

அல்லிக்கேணியை அரசாளும் மன்னவன்
அன்புடன் பார்த்தனுக்கு அருளிய சாரதி
(திரு)  அல்லிக்கேணியை

ஆயர் குலத்துதித்த அழகன் துவாரகை செல்வன்
தர்மத்தின்தலைவனாய்  கண்கொள்ளாக் காட்ஷியுடன்  
(திரு)  அல்லிக்கேணியை அரசாளும் மன்னவன்
                                    
தேரோடும் வீதியிலே ஆனந்த முகில் வண்ணன்
திவ்ய அலங்காரமாய் தேவியுடன் பவனிவர
அடியவரெல்லாம் மந்திர கோஷம் ஓதிடவே
வெகு ஆனந்தமாய் அனைவரும் கண்டுகளிக்க
(திரு)  அல்லிக்கேணியை அரசாளும் மன்னவன் 

பூலோக வைகுண்டம்

மனதிற்குகந்தது மாதவன் அவதரித்த வடமதுரையா
இன்னமுதன் அந்த மாயவன் வளர்ந்த கோகுலமா
ஆயர்களுடன் அழகன் மாடுமேய்த்த ஆயர்பாடியா
ராதையுடன்கண்ணன் ஆடிய பிருந்தாவனமா
குழந்தையாய் கொஞ்சி விளையாடும் குருபவனமா
கோபாலனாய் காட்ஷி அளிக்கும் தட்க்ஷிண துவாரகையா
தீனதயாளனாய் திவ்ய தரிசனம் தரும் திருமலையா
ஆனந்தமாய் அந்த ரங்கன் பள்ளிகொண்ட திருஅரங்கமா
மாலோலனின் கடைக்கண்  பார்வைபட்டால் - எங்குமே
பூலோக வைகுண்டமே! என்றுமே பூலோக வைகுண்டமே!  

திரு ஆரூர் தியாகேசா

     தமிழ் நாட்டில் உள்ள பல பழமையான ஆலயங்களுள் ஆரூர் தியாகேச ஆலயமும் ஒன்று.
இதன் சிறப்புக்கள் சொல்லிலோ எழுத்திலோ அடங்காதவை. மஹாவிஷ்ணு, தேவேந்திரன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டது இந்த தியாகராஜ விக்ரஹம். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புக்கள் பெற்றது.
     கோயிலுக்கு ஐந்து பிரதான வாயிற் கோபுரங்கள் இருப்பதும் வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இறைவனின் திருவடிகளைக்காணமுடியும் என்பதும், குறிப்பிட்ட சில மலர்கள் மட்டுமே அர்ச்சனைக்கு ஏற்பது போன்ற தனி சிறப்புக்கள். இவ்வூரின் பஞ்சவாத்தியமும் உலகப்புகழ் பெற்றது. தஞ்சை பெரியகோவில் மாதிரியே இவ்வாலயத்திலும் கலசநிழல் கீழே விழாதவண்ணம் அமைந்துள்ளது. இங்கு மட்டுமே தந்தம் இல்லாத வினாயகரை தரிசிக்கலாம்.
      திரு ஆரூர் தேர், அதற்குத்தான் எத்தனை மகிமை. முன்னூறு டன்னுக்குமேல் எடையுள்ள பிரும்மாண்டமான இவ் ஆழித்தேரை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். "திரு ஆரூர் தேர் அழகு" என்று சொல்லும் பழமொழிக்கு ஏற்ப இந்தத்தேர் தான் எத்தனை கலை அம்சம் பொருந்தியது. இவ்வாழித்தேரைத்தவிர மற்ற வாகனங்களில் தியாகேசர் வீதி உலா வருவதில்லை. கிரகணகாலத்திலும் நடை திறந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது இங்கு தனி சிறப்பு.
      இங்கு தெப்போற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தத்தெப்பமும் மிகப்பெரியது. இதில் குறைந்தது 200 பேராவது கண்டிப்பாக அமரமுடியும். தெப்பத்தின் உள்ளே பெரிய பெரிய வித்வான்களின் கச்சேரிகளும் நடைபெரும்.
       இவ்வூருக்கு மற்றுமொரு சிறப்பு, ஐந்துவேலி ஆலயம் ஐந்துவேலி கமலாலயம். கமலாலயம் என்பது இங்குள்ள திருக்குளத்தின் பெயர். ஆலயம் என்ற பெயர் கொண்ட திருக்குளம் இது ஒன்றே.
       இவ்வூரில் தனக்கென தனி கொடிமரம், தனிமதில், தனிக்கோயில் கொண்டு மோனத்தவநிலையில் காட்க்ஷி அளிக்கும் கமலாம்பிகையின் பேரெழிலை காண கண்கள் கோடிவேண்டும். இங்கு அம்பாள் சிவசக்தி வடிவமாய் சிரசில் கங்கையும் பிறையையும் அணிந்து அருள் புரிகிறாள். இங்கேயே ஷண்முகனைகொஞ்சும் அன்னையாய் நீலோத்பலாம்பளையும் தரிசிக்கலாம்.
      இவ்வூரில் சங்கீத மும்மூர்த்திகள் அவதரித்ததும் மற்றுமொறு சிறப்பு. தீட்ஷதர் பாடிய வாதாபிகணபதிம், வல்லபநாயகஸ்ய, ஶ்ரீமஹாகணபதிம் போன்ற வினாயகர் கீர்த்தனைகள் அனைத்தும் இங்குள்ள வினாயகரின் மேல் பாடப்பட்டவைகள். நவாவர்ண கிருதிகளால் கமலாம்பாளையும் தீட்ஷதர் பாடிப்பணிந்து பரவசம் அடைந்துள்ளார் என்பதும்ஒரு சிறப்பு.
         இப்படி இன்னும் பல புகழ்களை கொண்டது திருவாரூர். ஊரழகு, பேரழகு, நீரழகு, தேரழகு, தெய்வமோஅழகோ அழகு, தெருவுமே அழகு என அழகெல்லாம் ஒருசேர விளங்கிடும் இக்கோயிலை கண்டுமகிழ இப்பொழுதே புறப்படுங்கள்.

இது நான் பல இடங்களிலிருந்து படித்தும் கேட்டும் அறிந்த தகவல்கள். திருவாரூருக்கு பக்கத்தில்தான் நான் பிறந்து வளர்ந்த கிராமம் கல்யாணமஹாதேவி உள்ளது.
          

வேங்கடநாயகா தயை புரியாயோ

ஒப்பில்லாத புகழ் உடையவனே  உனை அன்றி வேறுதுணை உளதோ 
கார்கால மேகநிறமுடையவனே கணக்கற்ற மாயச்செயல் ஆற்றவல்லவனே 
உலகளந்த உனது திருவடிகளை நான் கணப்பொழுதும் மறவேனே கண்ணா 
இவ்வடிமையை நீயும் கைவிடலாகுமோ இனியவனே இன்றி அமையாதவனே 
கோவிந்தா  கோதண்டராமா என்று நான் கதறுவது 
உனக்கு கேட்கவில்லையோ எம்மை ஆளும் ஆராவமுதனே 
ஐயா என் வினை  தீர்த்திடாயோமாயோனே
                                                                                   
தயை புரியாயோ  வேங்கடநாயகா    
தண்டனிட்டேன் உன்னை கலியுகவரதா                         
மாயம் பலநிறைந்த இப்பூவுலகினிலே   
மயங்கியே நான்உன்னை மறவாதிருக்க
தயை புரியாயோ ...

சிந்தை தனில் உன்னை இருத்தியே நான்  
ஆனந்தமாய் உன்தன் புகழ்தனை பாடிடவே        
மந்தஹாசமாய் புன்னகைத்து நிற்கும் 
மலையப்பா கோவிந்தா கருடத்வஜா  நீ                        
தயை புரியாயோ ...

குருவாயூர் வந்தானே கோகுலபாலன்

பிரளய நீரில் மிதந்த பாலனை! பரந்தாமனை! உண்ணிகருஷ்ணனை! 
பரவசமாய் குருவும் வாயுவும் பார்த்து  அள்ளி அணைத்து ஆனந்தக்கூத்தாடி  
துள்ளி ஓடும் ப்பாலகனுக்கோர் இடம்தேடியே 
பார்முழுதும் சுற்றி வந்திட அங்கோர் தடாகம் தனில் 
சக்தி சிவனின் நடனம் கண்டு பாலகனின் பிரதாபத்தை அவர்களிடம் கூறவே 

இதுவே இப்பாலகனுக்குகந்த இடம்!
இதுவே தட்ஷிணதுவாரகையான  குருவாயூர்!
என அவரும் உவகையுடனும்  பூரிப்புடனும் கூறி அன்புடன் அவர்களை வரவேற்க 
குருவாயூர் வந்தாரே  கோகுல பாலன்

கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே

காலில் சலங்கை ஜதிகள்பாடிட கழுத்தில் ரத்தின மாலைகள் அசைந்தாட
பஞ்சாயுதம் தரித்து பாலன் பவனிவர அடியார்கெல்லாம் உற்சாகம் பொங்கிட
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே
                                   
மண்ணை தின்று வாயில் உலகைக் காட்டியே அன்னை யஸோதையை அயரசெய்தவன்
பால் வெண்ணெய் திருடிய பாலகனாம் நீலமேகசியாமளன் நித்ய அலங்காரரூபன்        
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே
  
ஆயர்பாடி கோபியர்கள் தாபமுடன் பார்த்திட ராதையுடன் கைகோர்த்து ஆடிய கள்வன்
பார்த்தனுக்கு சாரதியாய் தேரையும் ஓட்டிபல பணிகள் புரிந்த துவாரகை மன்னன்
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே

பஞ்ச வாத்தியங்கள் திக்கெட்டும் முழங்கிட பக்தர்கள் அனைவரும் ஆனந்தமாய் ஆட       
குறையாவும் தீர்ந்து நிறை வாழ்வு பெறவே குருவாயூர் செல்லுவோம் நாமுமே வாருங்கள்                     
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே

 


Wednesday, February 5, 2014

கண்ணா நடனம் ஆடினாயே

ஆனந்தமாய் நடனம் ஆடினாயே கண்ணா 
காளிங்கன் மேல் உன்பொற்பாதத்தை பதித்து (வெகு) 
ஆனந்தமாய் நடனம் ஆடினாயே கண்ணா       

கண்ணா மணிவண்ணா என்றலரிய அடியவன் 
கஜேந்திரனுக்கருளிய கார்வண்ணா (நீ வெகு)
ஆனந்தமாய்  நடனம் ஆடினாயே கண்ணா                                                            

உலகையே உண்டும் பசி தீராமல் - நீ 
வெண்ணையையும் திருடி உண்டாயே
என் மனம் அறியாயோ மன்மதனே 
உன்தன் எண்ணம்தான் என்னவோ அறியேனே 
ஆனந்தமாய் நடனம் ஆடினாயே  கண்ணா