Friday, December 6, 2013

எப்படி மனமுவந்து கொடுத்தாய்

எப்படி மனமுவந்து கொடுத்தாய் தேவஹியே 
ஈரேழு புவனமாளும் மாயவனைபெற்று - நீ 
எப்படி மனமுவந்து கொடுத்தாய்

முன்னூறு நாள் சுமந்துபெற்றெடுத்த மாதவனை 
முத்தமிட்டு சீராட்டி பாலூட்டி வளர்க்காமல்  - நீ
எப்படி மனமுவந்து கொடுத்தாய்

ஆலின் இலைமேல் துயின்ற பச்சிளம்சிசுவை 
ஆதவன் வருமுன் வசுதேவரிடம் கொடுத்தனுப்பி 
யமுனாநதிக்கரையில் கோகுலம்தனில் இருக்கும் 
யஸோதையிடம் அளித்து வளர்க்க சொல்லிட  - நீ 
எப்படி மனமுவந்து கொடுத்தாய்

பாலகிருஷ்ணனாம்

பாலகிருஷ்ணனாம் கோபாலகிருஷ்ணனாம் 
பாலும்வெண்ணையும் திருடிஉண்ட பக்தவத்ஸலன் 
நீலவண்ணனாம் கண்ணன் நீலவண்ணனாம் 
ஜாலமிக்க செய்பவனின் தாள்பணிந்திடு 
தினமும் தாள்பணிந்திடு தினமும் தாள்பணிந்திடு

Wednesday, December 4, 2013

அன்பழகா வாவா

அன்னைபராசக்தி ஈன்ற அன்பழகா வாவா 
ஆறு படைவீடுடைய ஆறுமுகா வாவா 
இன்னல்யாவும் தீர்த்திடவே இன்னமுதே வாவா 
ஈசர்க்குபதேசம் செய்த ஐயனேநீ வாவா 
உண்மைபொருள் உறைத்திடும் உத்தமனே வாவா 
ஊதுகுழலோன் மருகா முருகா நீ வாவா 
என்தன் உள்ளம் மகிழ்ந்திட என்றும் நீ வாவா 
ஏற்றங்கள் தரும் திருவேலனே நீ வாவா 
ஐங்கரத்தோனுடன் ஐயம் தீர்க்க வாவா 
ஒப்பில்லாத வள்ளலே ஓர்நிலை உணர்த்த வாவா 
ஓம்காரப்பிரணவநாதா ஷண்முகா நீ வாவா 
ஔவைக்கு அருளிய ஔடதமே நீ வாவா 
கந்தா நீ வா வா கார்த்திகேயா வா வா 

ஶ்ரீ ஆண்டாள் பொன் மலரடிகளே சரணம்

அழகு மிக்க வனம் அமைத்து அதில் மலரும் மலரை பறித்து  
அரங்கனுக்கு மாலைகட்டி அகம் மகிழ்ந்தார்  பெரியாழ்வார்
        மாலுக்கு மாலைகள் கட்டி மகத்தான பணி செய்து வந்த
        மஹானுக்கு மகளாய் துளசி வனத்தில் கிடைத்தால் பூதேவி
பொன்மலர் பூத்தது போல் பூ மகளை கண்ட ஆழ்வார்  
பூக்களோடு பூவாய் அணைத்து பூரித்து ஆனந்தம் கொண்டார்
        நித்தமும் தான் வணங்கும் வித்தகனாம் அந்த ரங்கன் 
        சித்தம் மகிழ்ந்து தனக்களித்த வித்தையை நினைந்து  மகிழ்ந்து
கோடிசூர்ய பிரகாசமுடன் ஆடிப்பூரத்தில் பிறந்தபெண்ணிற்கு
கோதை என்று பெயர் சூட்டி ஆடிப்பாடி களித்தாராம்
        குழந்தைகோதை குமரி ஆகி குடம் குடமாய் தண்ணீர் ஊற்றி 
        குலுங்கிய மலர்களை பறித்து  ரங்கனுக்கு மாலை கட்டி மகிழ
ஆழ்வாரின் இல்லம் வரும் அடியார்கள் அனைவரும் 
அந்த ரங்கன் புகழ் பாடக்கேட்டு ஆனந்தம் மிக அடைந்தாள்
        மணப்பருவம் அடைந்த மங்கை மாயனான அந்த ரங்கனை
        மனாளனாய் தனக்கு வரித்துக் மனதில் கனவு பலவும் கண்டாள்
காதில் குண்டலம் மினுமினுக்க கழுத்தாரமும் கை வளைகளும் பளபளக்க 
நீலவண்ண சிற்றாடை கட்டி நெற்றியில் நீண்ட திலகமும் இட்டு 
        இடது பக்க கொண்டையில் விதவிதமாய் பூக்களை சுற்றி 
        இன்பமுடன் கண்ணாடியில் தன் முகத்தை யே பார்த்து ரசித்தே
அரங்கனின் மாலைகளை ஆவலுடன் பார்த்த கோதை - தான் 
அணிந்து பார்க்க ஆசை கொண்டு அரங்கனையே மனதில் நினைந்து
        மல்லிகைமாலை எடுத்தணிந்தாள் அதில் மஹாவிஷ்ணு முறுவலித்தார்
        மட்டற்ற மகிழ்ச்சி கொண்டாள் மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்
ரோஜாமாலை எடுத்தணிந்தாள் அதில் ரங்கராஜன் தோன்றி கண் சிமிட்ட 
சாமந்திமாலையில் பார்த்தசாரதி  புன்னகைத்தார்
        கோபாலனை ஆளவே அவள் கோபிகையாய் தானும்மாறி
        மார்கழி நோன்பிருந்து மாயவனை வழி பட்டாள்
என்றென்றும் தன்னுடன் அந்த ரங்கனையே அவள்கண்டாள் 
பாவை அவள் பூ மாலையுடன் திருப்பாமாலையும் தொடுத்தளித்தாள்
        அனந்தனை ஆட்கொண்டாள். ஆண்டாள் எனப்பெயர் பெற்றாள்
        ஆடிப்பூரத்தில் பிறந்த அந்த சூடிக்கொடுத்த சுடர்கொடி
சூடிக்கொடுத்தசுடர்கொடி அவள் சூடிக்கொடுத்தசுடர்கொடி
கோதை நாச்சியார் பொன் மலரடிகளே சரணம்!