Thursday, May 31, 2012

மாருதியை தினம்

மாருதியை தினம் மனதில் நினைப்போர்க்கு
மனசஞ்சலங்கள் எல்லாம் மறைந்திடுமே - வீர

காரியசித்தி பெற்று கவலைகள் மறைந்து நம்
கனவுகள் கைகூடி களிப்புடன் என்றும் இருக்க

வாயுகுமாரனான அந்த சுந்தரரூபனை
வானர வீரனை வரப்பிரஸாதியை
என்றும் ஶ்ரீராம நாமம் ஜபித்திடும் ஶ்ரீராமதாசனை
ரகுபதி பிரியனை தினம்நினை மனமே

Wednesday, May 23, 2012

என்ன புண்ணியம் செய்தாயோ பாற்கடலே

என்ன புண்ணியம் செய்தாயோ பாற்கடலே 
கண்ணன்வந்து அங்கு பள்ளிகொள்ளவே - நீ 

ஆலந்தளிரில் கண் வளர்ந்த ஆராவமுதன் 
அலைகடலான உன்மேல் ஆசையாய் பள்ளிகொள்ள 
என்ன புண்ணியம்.... 

மாவலியிடம்சென்று பூமியை யாஜித்துப்பெற்று 
மாசற்ற சீதையைகாக்க ராவணனைகொன்ற அந்த 
இடைப்பிள்ளையான துவாரகைசெல்வனவன் 
ஈரேழு புவனமாளும் கோவிந்தன் பள்ளிகொள்ள 
என்னபுண்ணியம்....

Thursday, May 17, 2012

ஶ்ரீராமனின் பட்டாபிஷேகம்

ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே - எங்கள்
சீதாராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே 

வீடுகளை சுத்தம்செய்து வாசலில் கோலமிட்டு 
வாழைமரங்கள் நட்டு மாவிலை தோரணம்கட்டி 
வீதியெங்கும் பந்தல்போட்டு விதவிதமாய் வர்ணம்பூசி 
ஜோதிமயமாய் செய்து தேவலோகம் போல்ஆக்கி
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

புத்தாடை கட்டி மகிழ்ந்து பூச்சூடி பெண்கள் திகழ்ந்து 
பாட்டுக் கச்சேரியும் செய்து பரதநாட்டியமும் ஆடி 
கும்மி அடித்து கொண்டாடி கூத்துக்கள்யாவும் செய்து 
மங்களவாத்யம் முழங்க மங்கையர் தீபம் ஏற்ற
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

புண்ணியராமனை கண்டு புகழ்மாலைகள் சூட்டிட 
புத்துயிர் தனை பெற்ற மாநகர் அயோத்தியில் 
வானரர் யாவருமே வானதிர கூச்சல் போட 
மன்னாதிமன்னர்கள் யாவருமே வந்தங்கு சேர
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து அங்கு 
திக்கெட்டு திசையும் சென்று நன்னீர் கொண்டுவர 
தங்கக்குடங்களில் புண்ணிய தீர்த்தம் நிறைத்து 
புனித மந்திரங்கள் கூறி ராமனுக்கு அபிஷேகம்செய்ய
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ...

பொன்னாடைகட்டியராமன் பொலிவோடுகாட்ஷிகொடுக்க 
அன்னைசீதையும் கண்ணைபறிக்கும் அலங்காரமுடன்வர 
தங்கமயமான தம்பதிகள் இருவரும் தளிர்நடைபோட்டுவந்து 
வைரம் இழைத்த சிங்காசனத்தில் வகையாய் அமர
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

பலவகையான பட்ஷிணங்களும் பட்டியலிடமுடியாதபடி 
பாயசங்களும் பணியாரங்களும் கொண்டு வந்துவைக்க 
விதவிதமான பழவகைகளும் விரைவில் வந்துசேர 
விண்ணும்மண்ணும் அதிர வானவேடிக்கைகள் செய்து
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

பரதன் வெண்குடைபிடிக்க லக்குவனும் சத்ருகனும் சாமரம் வீச
ஹனுமன் ஶ்ரீராமனின் பதம் பணிந்து ஆவலுடன் அமர்ந்திருக்க 
குலகுரு வசிஷ்டரும் மணிமுடிஎடுத்து ஶ்ரீராமனுக்கு சூட்டிட 
மங்களவாத்யம் முழங்கியெங்கும் மகிழ்சிவெள்ளம் பெருக
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

தாயார்களிடம் ஆசிகள்பெற்ற தம்பதிகளைக்கண்டு 
இந்ராதிதேவர்களும் மாமுனிவர்கள் மன்னர்கள்யாவரும் 
இருகரம் கூப்பி வணங்கி சீதாராமன்வாழ்க என்று 
சிரம்தனை தாழ்த்தி வணங்கி சிந்தை குளிர நின்றனறாம் 
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே - எங்கள் 
சீதாராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே

மங்களம்:
அயோத்தியில் உதித்த ஆனந்தராமனுக்கு - கோசலைபெற்ற கோதண்டராமனுக்கு 
ஜானகியை மணந்த ஜானகிராமனுக்கு - மாருதி சேவித மங்களராமனுக்கு 
ராவணனை அழித்த ராஜாராமனுக்கு - பவித்ரமான பட்டாபிராமனுக்கு 
பங்கஜலோசன பரந்தாமனுக்கு - ஜெயமங்களம் நித்ய சுபமங்களம் 

ஜெயமங்களம் நித்ய சர்வமங்களம் - ஜெயமங்களம் நித்ய சுபமங்களம் 
ஜெயமங்களம் நித்ய சர்வமங்களம் - ஜெயமங்களம் நித்ய சுபமங்களம் 

Wednesday, May 16, 2012

ஏன் இந்த களைப்போ

ஏன் இந்த களைப்போ என் அமுதனே
பன்னகசயனா பள்ளிகொண்ட ரங்கா - உமக்கு
காண்போர் நெஞ்சமெல்லாம் பூரித்து நிற்க (உன்னை)
காவிரிகரைதனில் துயில்கின்ற - உமக்கு
திருவடியால் மூவுலகளந்த களைப்போ - நர
சிங்கமாய்வந்து இரண்யனை வதைத்த களைப்போ
சீதையை மணந்திட வில்லைஒடித்த களைப்போ
ராதையுடன் பிருந்தாவனம்தனில் ஆடிய களைப்போ - உமக்கு

திருமலைதேவா தென்பூவக நாதா

(ShivaVishnu Temple of South Florida)

திருமலைதேவா தென்பூவக நாதா 
தேடி வந்தோமே தினமும் உன்னையே - நாங்கள்.. 
பார்புகழ் வேந்தா பக்தவத்ஸலா 
பாடிடுவோமே உன்னை ஆனந்தமாக - நாங்கள்
நாராயணா என்று நாளும் சொல்லியே 
நாடிடுவோமே என்றும் உன்னையே - நாங்கள்
அனைத்தும் நீயே என்று கூவியே 
ஆடிடுவோமே உன்தன் சன்னிதிதனில் - நாங்கள்
உன்னை நம்பினால் எங்கள் குறையெல்லாம் 
ஓடிஒளிந்திடும் என்றறிந்தோமே - நாங்கள்
திருமலை தேவா தென்பூவக நாதா 
தேடிவந்தோமே தினமும் உன்னையே - நாங்கள்

ஆடினாளே ராதை



ஆடினாளே ராதை ...
அழகனுடன் ஆடினாளே ராதை 
மிக ஆனந்தமாகவே ஆடினாளே ராதை
பிருந்தாவனம் தனில் ஆடினாளே ராதை

கோபியர் யாவரும் தாபமுடன் பார்த்திருக்க 
கோலாகலமாகவே அங்கு மாதவனின் கைபிடித்து 
ஆடினாளே ராதை ...

வானோரும் மண்ணோரும் வாழ்த்தி வணங்கிட 
மாயவன் கள்வன் யஸோதை செல்வனுடன் 
ஒய்யாரமாகவே கண்ணனின் கைகோர்த்து 
தாதை தளாங்குதக ததிங்கிண தோம் என்று 
ஆடினாளே ராதை ...

உனக்கு நிகர் உண்டோ ஶ்ரீஉப்பிலியப்பா


உனக்கு நிகர் உண்டோ இப்புவிதனில் ஒப்பில்லா பெருமாளே ஶ்ரீஉப்பிலியப்பா 
மாமுனிக்கு மகளான மங்கைநல்லாள் ஶ்ரீபூமிதேவியை மணந்திட உப்பையும் துறந்த - உனக்கு ...
அடியவர்கள் துன்பம் தனை போக்கிடவே இவ் அகிலம் தனில் வந்து அருமருந்தாய் நிற்கும் 
என்னப்பனே பொன்னப்பனே மணியப்பனே உன் திருவடியே துணை உப்பிலியப்பா - உனக்கு...

என்னவென்று போற்றிடுவேன்

என்னவென்று போற்றிடுவேன் உன் புகழை 
கண்ணனின் நாயகியே கடைக்கண் பாராயோ 

அறிந்தறியாமல் செய்த பிழைதனை பொறுத்து
இவ் அடியவன் என்னிடம் கருணைகாட்டுவாய்தேவி 

விஷ்ணுசித்தர் கண்டெடுத்த வேதத்திருமகளே 
ஶ்ரீவில்லிப்புத்தூரை ஆளும் மாமணியே கோதா 
திருப் பாவை நோன்பிருந்து பள்ளிகொண்டரங்கனை
மணந்த தாயே தயைபுரி சூடிக்கொடுத்தசுடரே 

கந்தா குமரா வடிவேல் அழகா



கந்தா குமரா வடிவேல் அழகா கார்த்திகேயா நமோ நமோ 
முருகா கடம்பா சரவணபவனே மோகனரூபா நமோ நமோ 
வருவாய் மயில் மீதினிலே வேலா வள்ளிமனாளா நமோ நமோ 
பழணிமலை உறை பாலகா பார்வதிசுதனே நமோ நமோ 

ஆனந்தக்கூத்தாடினார்


ஆனந்தக்கூத்தாடினார் ஐயன் நடராஜன் - வெகு 
ஆனந்தமாகவே சிதம்பரம் தனில் - அவர் ஆனந்தக்கூத்தாடினார் ...

தேவர் முனிவர்களுமே திகைத்து நின்றிட 
தில்லை அம்பல திருச்சபைதனிலே - அவர் ஆனந்தக்கூத்தாடினார் ...

அன்னை சிவகாமி அர்த்தபுஷ்டியுடன் பார்த்திட 
அசைந்து அசைந்து ஒய்யாரமாகவே - அவர் 
இப் பாரினில் வந்தெமக்கு அருள் புரிந்திடவே
தாதை தாதை ததிங்கிணதகதோம் - என்று ஆனந்தகூத்தாடினார் ...

அம்மா அம்மா என்று


அம்மா அம்மா என்று ஆதங்கமாய் - நான் 
அழைப்பதை நீ அறியாயோ - உன்னை அம்மா அம்மா என்று ...  


பசியால் வாடிடும் பச்சிளம் சிசுபோல் 
பாராளும் நாயகி அன்னபூரணி - உன்னை அம்மா அம்மா என்று ... 


தீயகுணமதனை அகற்றியே நான் இந்த 
மாய உலகினில் மகிழ்வுடன் வாழ்ந்திட 
தாயாய் நீ இருந்திந்த ஏழை எளிய 
சேய்க்கென்றும் துணைபுரிவாய் தேவி - உன்னை அம்மா அம்மா என்று ...